மதுரோவின் மதிநுட்பம்

மதுரோவின் மதிநுட்பம்

உலகில் எண்ணெய் வளம் அதிகமுள்ள நாடுகளில் நான்காவது இடத்திலிருப்பது ஈரான், மூன்றாவது இடம் கனடாவுக்கு, இரண்டாமிடம் சவுதி அரேபியாவுக்கு, முதலிடம் எந்த நாடுன்னு தானே யோசிக்கிறிங்க? வெனிசுலா.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவைப் பற்றி அடிக்கடி பன்னாட்டு ஊடகங்களில் செய்திகள் உலா வரும். கடந்த இரண்டு வாரங்களாக வெனிசுலா- கயானா நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளதால் மீண்டும் பன்னாட்டு செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாகி உள்ளது வெனிசுலா.

வெனிசுலாவும் கயானாவும் தென் அமெரிக்காவில் உள்ள அண்டை நாடுகள். பல ஆண்டுகளாகவே இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை உள்ளது. இருப்பினும் தற்போது இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கிளம்ப காரணம் யார்? என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

பிரிட்டிஷ் கயானா என்ற அழைக்கப்பட்ட கயானா பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியத்தில் இருந்து விடுதலை பெற்ற ஒரு குட்டி நாடு. கயானாவின் தற்போதைய அதிபர் இர்ஃபான் அலி ஆவார். மேலும் ஆங்கிலம் பேசும் ஒரே தென் அமெரிக்க நாடு கயானா தான் என்பது கூடுதல் தகவல்.

கயானாவின் முக்கிய பகுதி எசெகிபொ (Essequibo) ஆகும். இப்பகுதியில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் வளம் உள்ளதை 2015 ஆம் ஆண்டு ExxonMobil என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் கண்டுபிடித்தது.

இப்பகுதியின் உரிமை குறித்து தான் நெடுங்காலமாக வெனிசுலாவிற்கும் கயானாவிற்கும் பிரச்சனை உள்ளது.

இப்பிரச்சனை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்தார். அதாவது கயானாவின் எசெகிபோ பகுதியை பொது வாக்கெடுப்பு நடத்தி தங்கள் நாட்டோடு இணைத்துக் கொள்ள நினைத்தார் மதுரோ.

அதற்காக கடந்து டிசம்பர் மூன்றாம் தேதி வெனிசுலாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் டிசம்பர் ஐந்தாம் தேதி அறிவிக்கப்பட்டது.

இணைப்புக்கு 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு அளித்தனர். எனவே கயானாவின் எசெகிபோ பகுதியை வெனிசுலாவின் புதிய மாகாணமாக அறிவித்தார் நிக்கோலஸ் மதுரோ. இவர் 2013 ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவின் அதிபராக உள்ளார்.

புதிய மாகாணத்திற்கு கயானா எசெகிபா (Guayana Esequiba) என பெயரிட்டு அதன் தலைவராக ரோட்ரிகஷ் கபெல்லாவை (Rodriguez Cabello) நியமித்தார். மேலும் கயானா எசெகிபாவை உள்ளடக்கிய வெனிசுலா நாட்டின் புதிய வரைபடத்தையும் வெளியிட்டார்.

பிரச்சனையை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது கயானா. பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று வெனிசுலாவிற்கு  பன்னாட்டு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இரண்டு நாடுகளிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தவிட்டுள்ளது.

இருப்பினும் எசெகிபோ பகுதியில் உள்ள எண்ணெய் வளங்கள் குறித்து ஆய்வு செய்யவும் அப்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகள் ஏற்படுத்தவும் PDVSA (PEDROLEOS DE VENEZUELA SA) என்று அழைக்கப்படும் வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கி உள்ளார் மதுரோ. இங்கேதான் இருக்கிறது சூட்சமம். ராஜதந்திரம்.

கடந்த அக்டோபர் (2023) மாதம் வெனிசுலாவின் எதிர்க்கட்சிகளுக்கும் மதுரோவின் அரசுக்கும் இடையே பார்படாஸில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. வெனிசுலாவின் சிறைகளில் உள்ள அமெரிக்க கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதும், எதிர்கட்சிகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதும் இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாகும்.

பார்படாஸ் உடன்படிக்கைக்கு பிரதிபலனாக அமெரிக்க அரசாங்கம் PDVSA மீதான தடையை நீக்கியது. இதனால் PDVSA தன்னுடைய உற்பத்தியை அதிகரிக்கவம் விரிவாக்கவும் சந்தை விலைக்கு எண்ணெயை விற்கவும் முடியும் என்ற நிலை உருவானது. இதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கயானாவின் மீது வெனிசுலா போர் தொடுக்க வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது. கயானாவிற்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உள்ளதே இதற்கு காரணம்.

எது எப்படி இருப்பினும் இந்த பொது வாக்கெடுப்பு வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவின் சரிந்திருந்து செல்வாக்கை உயர்த்துவதற்கு கட்டாயம் பயன்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இந்த செல்வாக்கு உயர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள வெனிசுலாவின் அதிபர் தேர்தலில் எதிரொளிக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

article link