பர்மாவின் பயிர்
சப்தமில்லாமல் ஒரு உலக (மோசமான) சாதனையை செய்துள்ளது மியான்மர். உலகளவில் அதிகமான ஓபியம் உற்பத்தி செய்யும் நாடு என்பது தான் அந்த சாதனை. கடந்த ஆண்டு வரை இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த நாடு ஆப்கானிஸ்தான்.
2023 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் 330 டன் ஓபியம் உற்பத்தி செய்துள்ளது. ஆனால் மியான்மர் 1080 டன் ஓபியம் உற்பத்தி செய்துள்ளது, இது கடந்த ஆண்டைவிட 36% அதிகம், என்று போதைப் பொருள்கள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNITED NATIONS OFFICE FOR DRUGS AND CRIME) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இவ்வறிக்கையிலிருந்து நாம் அறிவது யாதெனில், மியான்மரில் ஓபியம் பயிரிடப்படும் பரப்பளவானது 2023 ஆம் ஆண்டு 47000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 18% அதிகமாகும். சராசரியாக, ஒரு கிலோ புதிய ஓபியம் $317க்கும், ஒரு கிலோ உலர்ந்த ஓபியம் $356க்கும் விற்கப்படுகிறது.
மியான்மரின் முதலிடச்சாதனைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.
1. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள்கள் பயிரிடுவதற்கு தடைவிதித்துள்ளதாகும். இதனால் ஆப்கானிஸ்தானில் ஓபியம் பயிரிடப்படும் பரப்பானது 95% குறைந்துள்ளது.
2. மியான்மரின் இராணுவ ஆட்சியாகும். பல பத்தாண்டுகளாக அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிக் குழுக்களால் மியான்மரில் ஹெராயின் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளான ஓபியம் விளைவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மியான்மரின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்திற்காக ஊரகப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஓபியம் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.